நாற்று நட்டால் ஐ.ஏ.எஸ். ஆகலாம்!

லட்சங்களில் கட்டணம் வசூலிக்கும் பெருநகரப் பயிற்சி மையங்களில் சேர்ந்து படித்தால் மட்டும்தான் அரசுப் போட்டித் தேர்வுகளில் வெற்றிபெற முடியுமா? ‘ஆமாம்’ என்றுதான் பலரும் நம்பிக்கொண்டிருக்கிறோம்.

இந்த நினைப்புடனேயே ஆண்டுதோறும் 10 லட்சத்துக்கும் மேற்பட்ட இளைஞர்கள் இந்திய ஆட்சி பணித் தேர்வு முதல் வங்கித் தேர்வுகள்வரை எழுதிவருகிறார்கள். அவர்களில் சில ஆயிரம் பேர் மட்டுமே வெற்றியைத் தட்டிச்செல்கிறார்கள்.

சிறந்த பணிவாய்ப்பு

சென்னை, புதுடெல்லி போன்ற பெரு நகரங்களில் உள்ள ‘வசூல் ராஜா’ பயிற்சி மையங்களில் படிக்கும் வசதி வாய்ப்பு இல்லாமல்போனதுதான் தோல்விக்கான காரணம் என நினைக்கும் பெரும்பாலோர் ஆடுகளத்தில் இருந்து விலகிவிடுகிறார்கள்.

ஆனால், இத்தகைய மூடநம்பிக்கையைப் புரட்டிப்போட்டுக்கொண்டிருக்கிறது காஞ்சிபுரத்திலிருந்து 30 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள செய்யாறில் செயல்பட்டுவரும் ‘சபர்மதி ஆஃப் சவுத்’ பயிற்சி மையம். இங்கு வழங்கப்படும் கட்டணம் இல்லா பயிற்சிகள் வழியாக இளைஞர்கள் பலர் வங்கித் துறை, குடிமைப் பணி ஆகியவற்றில் பணிவாய்ப்பைப் பெற்றுவருகிறார்கள்.

பொருளாதாரப் பின்னடைவோ பெருநகரங்களில் தங்கிப் படிக்கும் வாய்ப்பின்மையோ ஒருபோதும் இளைஞர்களின் லட்சியப் பாதையில் தடைக்கற்களாக முடியாது என்று நிரூபித்துவருகிறது இம்மையம். அதிலும் நாளைய இயற்கை விவசாயிகளையும் ஐ.ஏ.எஸ். அதிகாரிகளாக உருவாக்கும் தளமாக இது உருவெடுத்துவருகிறது.

கம்பசூத்திரம் அல்ல

செய்யாற்றின் செம்மண் பூமியில் ஐந்து ஏக்கர் பரப்பளவில் உள்ள விளைநிலத்தைக் குத்தகைக்கு எடுத்து ‘சபர்மதி ஆஃப் சவுத்’ மையத்தை நிறுவியிருக்கிறார் குணசேகரன். பொறியியல் பட்டதாரியான இவர் சென்னையின் பிரபல ஐ.ஏ.எஸ். அகாடமி ஒன்றில் பகுதி நேரப் பயிற்சியாளராகப் பணியாற்றிவருகிறார். 2004-ம் ஆண்டுமுதல் ‘ஸ்மைல் வெல்ஃபேர்’ அறக்கட்டளையின் வழியாகக் கல்வி தொடர்பாகப் பல சேவைகளைத் தமிழகத்தின் வெவ்வேறு பகுதிகளில் செய்துவருகிறார். மறுபுறம் இதுபோன்ற உயர்கட்டண வசூல் முறை இல்லாமலேயே போட்டித் தேர்வுகளுக்கான பயிற்சிகளை இளைஞர்களுக்கு வழங்க வேண்டும் என்ற முனைப்பில் ‘சபர்மதி ஆஃப் சவுத்’ மையத்தை நடத்திவருகிறார்.

“கல்விக்கு அடுத்தபடியாக வேலை பெறுவதற்கான வழிகளும் இன்று மிகப் பெரிய வியாபாரச் சந்தையாக மாற்றப்பட்டிருக்கிறது. உண்மையில் போட்டித் தேர்வுகளில் வெற்றி அடைவது ஒன்றும் கம்பசூத்திரம் அல்ல. அதற்கு ஆறாம் வகுப்பு முதல் பிளஸ் டூ வரையிலான பாடங்களில் அத்துப்படியாக இருக்க வேண்டும், நாள்தோறும் நாளிதழ் வாசிப்பைப் பழக்கப்படுத்திக்கொள்ள வேண்டும், எளிய வழிகாட்டுதல் தேவை அவ்வளவுதான்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *