லிங்காயத்துகளுக்கு சிறுபான்மையினர் அந்தஸ்து ஏன்?

பசவண்ணர், 12-வது நூற்றாண்டில் லிங்காயத்து தர்மத்தை உபதேசித்தார். களவு, கொலை, பொய்கள், அவதூறு போன்றவற்றைக் கைவிட அகத் தூய்மை வேண்டும் என்ற பசவண்ணர், மற்றவர்களுக்கு எதிரான வெறுப்பைக் கைவிடுங்கள் என்றார். லிங்காயத்துகள் தங்களுடைய சமயத்தை பிராமணிய, ஜைன, பூர்வீக வழிபாட்டு முறைகளிலிருந்து வேறுபட்டதாக உருவாக்கினர். எல்லாவகை உடலுழைப்புச் சாதியினரையும் சேர்த்துக்கொண்டனர். வசனங்களை சம்ஸ்கிருதத்தில் எழுதாமல், பாமரரும் படிக்குமாறு கன்னடத்தில் எழுதினர். உடலுழைப்பை மகத்தான ஆன்மிக லட்சியமாக உயர்த்தி, வெவ்வேறு தொழில்களைச் செய்தாலும் அனைவரும் சமமே என்பதை வலியுறுத்தினர். ஆலயங்களுக்குச் சென்று வழிபடுவதை நிராகரித்தனர், பிராணிகளைப் பலி கொடுப்பதைக் கைவிட்டனர்.

லிங்காயத்துகள் சைவ உணவு மட்டுமே உண்பவர்கள். திருமணங்கள் உள்ளிட்ட சடங்குகளைத் தங்களுடைய சமுதாயப் புரோகிதர்கள் மூலம்தான் நடத்துவர். இறந்தவர்களை எரியூட்டுவதில்லை, அடக்கம் செய்துவிடுவர். இவ்விதம் இறையியலிலும் சடங்கிலும் தங்களை வித்தியாசப்படுத்திக் காட்டுகின்றனர்.

இந்து மதத்தின் ஒரு கூறா?

இந்து மதக் கோட்பாடுகளிலிருந்து லிங்காயத்து தர்மம் வேறுபட்டது என்று எம்.எம்.கல்புர்கி விளக்கியிருக்கிறார். இந்து மதத்திலிருந்து வேறல்ல, அதன் ஒரு பகுதிதான் என்று சிதானந்த மூர்த்தி உள்ளிட்ட அறிஞர்கள் வாதிடுகின்றனர். கர்நாடகம், மகாராஷ் டிரம், தெலங்கானாவின் சில பகுதிகளில் லிங்காயத்து தர்மம் பரவியிருக்கிறது. புதிய லிங்காயத்துகள் எப்படிச் சேர்த்துக்கொள்ளப்பட்டனர், அவர்களுக்கு மடாலயங்கள் எப்படி தார்மிகத் தலைமையிடங் களாகச் செயல்பட்டன என்ற வரலாறு முழுமையாகத் தொகுக்கப்படவில்லை. லிங்கத்தை அணிவித்து தீட்சை அளித்து, லிங்காயத்துகளாக மாற்றும் நடவடிக்கைகளை இந்த மடாலயங்கள் இப்போதும் மேற்கொள்கின்றன.

மைசூர் மாகாணத்தில் 1881-ல் முதல் முறையாக இந்து மதத்தின் ஒரு சாதிப் பிரிவாக லிங்காயத்துகள் பதிவுசெய்யப்பட்டனர். தங்களைத் தனி மதத்தவராகக் கருத வேண்டும் என்ற அவர்களது கோரிக்கை, இந்திய அரசியல் சட்டம் உருவானபோது நிராகரிக்கப்பட்டது. இருபதாவது நூற்றாண்டின் முற்பகுதியில் குடை அமைப்பாகத் தொடங்கப்பட்ட ‘அனைத்து இந்திய வீரசைவ மகாசபை’, தங்களை தனி மதமாக அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கையை மன்மோகன் சிங் தலைமையிலான அரசிடம் 2013-ல் முன்வைத்தது. ‘லிங்காயத்துகள் தனி மதத்தவர் அல்ல, இந்துக்கள் தான்’ என்று கூறி அந்தக் கோரிக்கையை உள்துறை அமைச்சகம் அப்போது நிராகரித்துவிட்டது.

வலுப்பெறும் கோரிக்கை

கடந்த ஜூலையில் பீதரில் நடந்த மிகப் பெரிய லிங்காயத்துகள் பொதுக்கூட்டத்தில் இதே கோரிக்கை முதலமைச்சர் சித்தராமையாவிடம் முன்வைக்கப்பட்டது. ‘கோரிக்கையைப் பரிசீலிப்போம்’ என்றார் அவர். அதன் பிறகு, வட கன்னடத்தில் இதே கோரிக்கையை வலியுறுத்தி பொதுக்கூட்டங்கள் நடைபெற்றன. லிங்காயத்து மடாதிபதிகள் பலரும் காங்கிரஸ், மதச்சார்பற்ற ஜனதா தளத்தைச் சேர்ந்த லிங்காயத்து அரசியல் தலைவர்கள் பலரும் இணைந்து இந்தக் கூட்டங்களுக்கு மக்களைத் திரட்டினர்.

லிங்காயத்துகளைத் தனி மதமாக அங்கீகரிக்கலாமா என்று பரிசீலித்துப் பரிந்துரைக்க, நாகமோகன் தாஸ் தலைமையில் ஆறு உறுப்பினர் குழுவை சித்தராமையா அரசு மூன்று மாதங்களுக்கு முன்னால் நியமித்தது. லிங்காயத்துகளுடன் இறையியல் கொள்கையில் சில வேறுபாடுகள் வீர சைவர்களுக்கு இருந்தாலும், இருவரும் ஒரே பிரிவினராகவே அரசு ஆவணங்களில் குறிப்பிடப்படுகிறது. லிங்காயத்துகளைத் தனி மதமாக அங்கீகரிக்க வேண்டும் என்று நாகமோகன் தாஸ் குழு அளித்த பரிந்துரையை ஏற்க வேண்டும் என்று மத்திய அரசை சித்தராமையா அரசு கேட்டுக்கொண்டிருக்கிறது.

லிங்காயத்துகள் – வீர சைவர்கள்

பசவரின் காலத்துக்கு முன்பிருந்தே செயல்படும் ஐந்து வீர சைவ மடங்கள் பசவரைவிட, ரேணுகாச் சாரியாரைப் போற்றிப் பின்தொடர்கின்றன. இவை வேதங்களை ஏற்பதால், வேதங்களில் கூறியுள்ளபடி சடங்குகளைச் செய்கின்றன. மொத்த லிங்காயத்துகளின் எண்ணிக்கையில் 10% ஆக இருக்கும் வீர சைவர்கள், அவர்களுடன் திருமண உறவு வைத்துக்கொள்வதில்லை. இதர காரியங்களிலும் தனித்தே இயங்குகின்றனர்.

‘வீர சைவ மடங்களில் சாதிப் பாகுபாடுகள் உள்ளன, பெண்களைச் சமமாக நடத்துவதில்லை’ என்று லிங்காயத்து தலைவர்களில் சிலர் அவ்வப்போது குற்றம்சாட்டுவதும் உண்டு. லிங்காயத்துகளுடன் தங்களைச் சேர்ப்பதையே வீர சைவர்களில் பலர் ஒப்புக்கொள்வதில்லை. இன்னும் சிலர் தங்களைத் தனி மதமாக அறிவிப்பதையும் ஏற்கவில்லை.

அரசியல் நோக்கங்கள்

6.5 கோடி மக்கள்தொகை கொண்ட கர்நாடகத்தில் லிங்காயத்துகளின் எண்ணிக்கை மட்டும் 13%. அவர்கள் அரசியல் – சமூக விழிப்புணர்வு உள்ளவர்கள். கர்நாடக சட்டப் பேரவையின் மொத்தமுள்ள 224 உறுப்பினர்களில் 47 பேர் லிங்காயத்துகள். சுமார் 100 சட்டப் பேரவைத் தொகுதிகளில் தேர்தல் முடிவு களையே மாற்றும் அளவுக்கு எண்ணிக்கை பலம் உள்ளவர்கள். 2011-ல் பசவ ஜெயந்திக்கு மாநில விடுமுறை அறிவித்தது பாஜக அரசு. எல்லா அரசு அலுவலகங்களிலும் பசவரின் உருவப்படங்களைக் கட்டாயம் மாட்ட வேண்டும் என்று கடந்த ஆண்டு உத்தரவிட்டது காங்கிரஸ் அரசு.

1970-கள் வரை காங்கிரஸ் கட்சியைத்தான் லிங்கா யத்துகள் ஆதரித்தனர். தேவராஜ் அர்ஸ் முதலமைச் சராக இருந்தபோது, இதர பெரும் சாதியினரை ஈர்க்கும் முயற்சியில் அவர் தீவிரம் காட்டியதால் லிங்காயத்துகள் காங்கிரஸை விட்டு விலகி, ஜனதா கட்சியை ஆதரித்தனர். ஜனதா பிறகு ஜனதா தளம் என்றாகி, அதன் பிறகு எச்.டி.தேவகௌடா தலைமை யில் மதச்சார்பற்ற ஜனதா தளம் உருவாகியது. அவர் ஒக்கலிகர் சாதியைச் சேர்ந்தவர் என்பதால், 1990- களின் பிற்பகுதியில் லிங்காயத்தான பி.எஸ்.எடியூரப்பாவுக்காக பாஜகவை ஆதரித்தனர். ஊழல் புகார் களையடுத்து, கட்சி மேலிடம் எடுத்த நடவடிக்கைகளால் கோபமடைந்த எடியூரப்பா ‘கர்நாடக ஜனதா பட்ச’ என்ற கட்சியை 2012-ல் தொடங்கினார். இதனால் லிங்காயத்துகளின் ஆதரவை இழந்த பாஜக 2013-ல் ஆட்சியையும் காங்கிரஸிடம் இழந்தது.

கர்நாடகத்தில் பாஜக ஆட்சிக்கு வர லிங்காயத்து கள் ஆதரவு அவசியம். அதே சமயம் இந்து மதத்திலிருந்து அவர்கள் பிரிந்து செல்வதையும் அதனால் ஏற்க முடியவில்லை. எனவே, ‘இந்துக்களைப் பிளவு படுத்துகிறது காங்கிரஸ்’ என்று சாடிவருகிறது. அனைத்திந்திய வீர சைவ மகாசபை என்ன முடிவெடுக்கிறதோ அதன்படி செயல்படத் தயார் என்று அறிவித்திருக்கிறார் எடியூரப்பா. லிங்காயத்துகளைத் தனி மதமாக அறிவிக்க வேண்டும் என்று மத்திய அரசிடம் 2013-ல் அளித்த கோரிக்கை மனுவில் கையெழுத்திட்டவர்களில் எடியூரப்பாவும் ஒருவர்.

கலாச்சாரமும் காரணம்

லிங்காயத்துகள் பாஜகவுக்கு ஆதரவாக முழுதாகக் களத்தில் இருப்பதால், அவர்களுடைய ஆதரவைத் தங்கள் பக்கம் இழுக்க காங்கிரஸும் மதச்சார்பற்ற ஜனதா தளமும் தீவிரமாக முயற்சிகளை மேற்கொண்டுவருகின்றன. இந்த அரசியல் உத்தியின் ஒரு பகுதிதான் அவர்களுடைய தனி மதக் கோரிக்கை ஏற்பு நடவடிக்கை. தங்களுடைய கோரிக்கையை ஏற்றுக்கொண்டதற்காக சித்தராமையாவுக்கு நன்றி தெரிவித்துள்ளனர் லிங்காயத்து மடாலயங்களின் தலைவர்கள்.

சிறுபான்மை மதமாக லிங்காயத்துகளை அறிவிப் பதால், அவர்களின் மடங்களுக்குப் பணப்பயன் ஏற்படப்போவதில்லை. லிங்காயத்து மடங்கள் பல உயர் கல்வி நிலையங்களை நடத்துகின்றன. பசவரின் சித்தாந்தங்கள், சனாதன இந்து மதத்துக்குள் அடக்கப்படுவதால் அது வெளியுலகுக்குத் தெரிவதில்லை, பரவவில்லை என்ற ஆதங்கம் காரணமாகத்தான் அவர்கள் தங்களைத் தனி மதமாக அறிவிக்கக் கோருகின்றனர். நவீன கால லிங்காயத்துகளிடையே சாதியக் கலாச்சாரம் தலைதூக்கத் தொடங்கியிருப் பதையும் சிலர் எச்சரிக்கையோடு சுட்டிக்காட்டுகின்றனர். பசவரின் சித்தாந்தங்களுக்கு ஒவ்வாத சில செயல்களும் லிங்காயத்துகளிடையே பரவுவது குறித்தும் கவலை தெரிவிக்கப்படுகிறது. ‘‘மற்ற சமூகத்தைவிட லிங்காயத்துகள் எப்படி வேறுபட்டவர்கள்? வீடுகளில் இப்போது செய்யப்படும் சடங்கு களுக்குப் பின்னாலிருப்பவை எவை? நம்முடைய மூதாதையர்கள் ஏன் லிங்காயத்துகள் என்று அழைக்கப்பட்டனர்?” என்ற கேள்விகளை லிங்காயத்துகள் தங்களுக்குள் கேட்டுக்கொள்ள வேண்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *