வன்கொடுமைத் தடுப்புச் சட்டம் நீர்த்துப்போக விடக் கூடாது!

பட்டியல் இனத்தவர் – பழங்குடிகள் வன்கொடுமைத் தடுப்புச் சட்டப்படி வழக்குகள் தொடரப்படுவதற்கு முன்னால் சில நடைமுறைப் பாதுகாப்பு ஏற்பாடுகளை விதிக்க வேண்டும் என்று உத்தரவிட்டிருக்கிறது உச்ச நீதிமன்றம். புகார் வருவதனாலேயே ஒருவரைக் கைதுசெய்வது கூடாது. காவல் அதிகாரி பூர்வாங்கமாக அதைப் பற்றி விசாரித்து புகாரின் தன்மை குறித்து உறுதிசெய்துகொள்ள வேண்டும் என்றும் கூறியிருக் கிறது. ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த மக்களுக்கு எதிரான வன்கொடுமைகள் அதிகரித்துவரும் நிலையில், இந்தத் தீர்ப்பு சில கேள்விகளை எழுப்புகிறது.

அரசு ஊழியர்கள் மீது இந்தப் புகார்கள் கூறப்படுமானால், அவர்களுடைய மேலதிகாரிகள் எழுத்துபூர்வமாக அனுமதி அளிக்காதவரையில் கைதுசெய்யக் கூடாது. புகாருக்கு உள்ளானவர் தனியான குடிமக்கள் என்றால், மாவட்ட காவல் துறைக் கண்காணிப்பாளர் விசாரணை நடத்தி, கைதுசெய்வதற்கு ஒப்புதல் தர வேண்டும் என்கிறது உச்ச நீதிமன்றம்.

தனிப்பட்ட பகைமையைத் தீர்த்துக்கொள்ளவும், எதிராளிகளை அலைக்கழிக்கவும்தான் ‘பட்டியல் இனத்தவர் – பழங்குடி கள் (வன்கொடுமைகள் தடுப்பு) சட்டம், 1989’ அதிகம் பயன் படுத்தப்படுகிறது என்ற கண்ணோட்டத்துக்கு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் வந்திருக்கிறார்கள் என்று தெரிகிறது. ‘தவறாகப் பயன்படுத்தப்பார்க்கிறார்கள் என்பதற்காக ஒரு சட்டத்தைத் திருத்தவோ, ரத்துசெய்யவோ வேண்டியதில்லை’ என்று ஏற்கெனவே தீர்மானிக்கப்பட்டிருப்பதைச் சுட்டிக்காட்ட வேண்டியிருக்கிறது.

இச்சட்டத்தின் விதிகளை மீறியவர்களுக்கு முன் ஜாமீன் தரக்கூடாது என்று சட்டத்தின் 18-வது பிரிவு கூறுகிறது. இந்த உரிமை மறுப்பு, வழக்குக்கு உள்ளான அனைவருக்குமானது அல்ல, குற்றம்சாட்டப்பட்டவர் மீது முதல் நோக்கில் வழக்கு எதுவும் இல்லை என்றால், அவருக்கு முன் ஜாமீன் வழங்கலாம் என்கிறது அமர்வு. உண்மையில், இந்தச் சட்டத்தின் கீழ் புகார்செய்யப்பட்டால் அவை உடனே விசாரணைக்கு ஏற்கப்பட்டு, வழக்கு தொடுக்கப்பட்டு, தீர்ப்புகள் வெளிவருவது மிகமிகக் குறைவு. வழக்குகள் பற்றிய தரவுகளை ஆராய்ந்தாலே இது தெரியவரும்.

இந்தச் சட்டம் 2015-ல் மேலும் திருத்தப்பட்டு கடுமையாக்கப்பட்டது. புதிய வகையான பாரபட்சங்களையும் தாக்குதல் வழிமுறைகளையும் கருத்தில்கொண்டு இப்படிச் செய்யப்பட்டது. இந்தச் சட்டம் தவறாகப் பயன்படுத்தப்படுவது குறித்து நீதிமன்றங்கள் கவனத்தில்கொள்வது சரியென்றாலும், இப்படிப்பட்ட வழக்குகளில் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்படும் கருத்துகள் குறித்து சமூகமும் சட்டமியற்றும் மக்கள் பிரதிநிதிகளும் கவலைப்பட வேண்டும்.

ஒவ்வொரு புகாரும் அக்கறையுடன் பதிவுசெய்யப்பட்டு, விரைவாக விசாரிக்கப்பட்டு தீர்ப்புகள் வெளிவந்துவிடும் என்றால், சட்டத்தைப் பற்றியோ, இதர நிர்வாக நடைமுறைகள் குறித்தோ நாம் கவலைப்பட வேண்டியதில்லை. நம்முடைய சமூகம் லட்சிய சமூகமாக இல்லை. எனவே, சமுதாயத்தின் நலிவுற்ற பிரிவு மக்களைக் காப்பாற்றுவதற்காக இயற்றப்பட்ட சட்டங்கள் எந்தக் காரணத்துக்காகவும் வலுவிழக்கப்படச் செய்யக்கூடாது. இந்தக் கவலை சமூகத்துக்கும் நீதிமன்றங்களுக்கும்கூட இருக்க வேண்டும்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *